மறைந்த கோபுரமும் மறையாத நினைவுகளும்-7

Leave a comment

May 13, 2016 by pandiyananbalagan

இந்நகரில் செட்டியார்களின் இருப்புக்கு அதிக முக்கித்துவம் இருந்தது. கடை வீடுகளில் சில அவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. பலர் வட்டிக்கடை வியாபாரத்தில் முன்னோடிகளாவர். பெரியவர் முத்து பழனியப்ப செட்டியார்  ஆங்கிலேயே ஆட்சி காலத்திலேயே மிகுந்த செல்வாக்குடன் வாழ்தவராவார். அவர் இந்நகரில் இந்தியர்களின் பிரதிநிதியாக இருந்து பல பொது விடயங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் முக்கியமானது இங்குள்ள இரண்டு கோயில்களும் ஒரு தமிழ்ப் பள்ளியுமாகும். செட்டியார்கள்  தங்கள் வழிபாட்டு வசதிக்காக பினாங்கில் பல சைவாகம கோயில்களை நிறுவி உள்ளனர். பினாங்கு பாலதண்டாயுதபானி கோயில், டத்தோ கிராமாட் சிவன் கோயில், சுங்கை ஜாவி சுப்ரமணியர் கோயில் போன்றவை புகழ் பெற்றவை.

அவ்வகையில் நகரத்தார் முயற்சியில் புக்கிட் மெர்தாஜாம் நகரில் ஒரு கடைவீட்டு வரிசையில் நிறுவப்பட்டதே சுங்குரும்பை முருகன் கோயிலாகும். பினாங்கு செட்டியார்கள் கோயிலின் ஒரு கிளை போல இக்கோயிலும் இயங்குகிறது. புக்கிட் மெர்டாஜாமில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா சிறப்பு நிகழ்வாக கொண்டாடப்படும்.

பொதுவாக செட்டியார் கோயில்கள் பொதுமக்களுக்கு வழிபாட்டு இடமாக இருந்தாலும் அதன் நிர்வாகம் முழுக்கவே செட்டியார்களின்  கட்டுப்பாட்டிலேயே இருக்கும். நிர்வாகம் அவ்வப்போது மாறினாலும் அது நகரத்தார் கைகளை விட்டு போவதில்லை. ஆகவே இக்கோவில்களில் அதிகார போராட்டங்கள் இருப்பதில்லை. இருந்தாலும் வெளியே தெரிவதில்லை. அதனால்தான் நகரத்தார் கோயில்கள் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தாலும் தலைமைத்துவ அடிதடிகள் எதுவும் பொதுவுக்கு வருவதில்லை.

முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் கொண்டாடப் பட்டாலும், பி.எம் நகர கோயில் திருவிழா என்பது அருகிலேயே இருக்கும் மங்களநாயகி அம்மன் கோயில் திருவிழாவைத்தான் குறிக்கும். வழக்கமாக பங்குனி உத்திரம் முருகக் கடவுளுக்கு உரிய நாளாக இருந்தாலும் இந்த அம்மன் கோயிலில் பங்குனி உத்திரம்தான் நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் திருவிழாவின் சிறப்பு திருவிழா அன்று நடைபெறும் தீமிதி உட்சவமும் தேரோட்டமுமாகும். மக்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் காண மக்கள் அதிகம் வருவது வழக்கம். முன்பு மங்கள நாயகி அம்மன் கோயிலின் பின்புறம் புறம்போக்கு கம்பம் ஒன்று இருந்தது. அக்கம்பத்தின் பெயர் கோயில் கம்பம். இப்போது அந்த கம்பம் முற்றாக நீக்கப்பட்டு புதிய வாணிப மையமாக வளர்ந்துள்ளது. முன்பு கோயில் திருவிழாவின் போது இந்த கம்பமும் கோலாகலமாக இருக்கும். கூடவே கோயில் திருவிழா வெட்டு குத்துகளும் நடப்பது வழக்கமானது.

முருகன் கோயில் நிர்வாகம் போலில்லாமல், மங்களநாயகி அம்மன் கோயில் நிர்வாகம் எல்லா தரப்பு மக்களையும் கொண்டதாகும்.   30 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட காலமாக இக்கோயிலின் தலைவராக NTS ஆறுமுகம் பிள்ளை அவர்களே இருந்தார். இக்கோயில் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றினார். கோயில் குடமுழுக்கு நடைபெற்றது கோயில் மண்டபத்தை கட்டி ‘சீதையம்மாள் திருமண மண்டபம்’ என்று பெயரிட்டார்.  அக்கோயில் அப்போது அவரது சொந்த கோயில் என்று சொல்லும் அளவுக்கு சூழ்நிலை இருந்தது. அவர் இருந்த காலத்தில் கோயிலில் எழுந்த எல்லா பிரச்சனைகளையும் அவரால் அடக்கி வைக்க முடிந்தது. ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து கோயில் நிர்வாகத்தில் கோஷ்டி பூசல்கள் மூண்டு பல வருடங்கள் எந்த மேம்பாடும் இன்றி இருந்தது. பண கையாடல்களும் போலீஸ் புகார்களும் நிறைந்தன. ஆயினும் தற்போது சில மாற்றங்கள் தெரிகின்றன.

பெரியவர் முத்துப்பழனியப்ப செட்டியார் தன் முயற்சியில் தொடங்கியதே புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியாகும். தொடக்கத்தில் இப்பள்ளி மங்கள நாயகியம்மன் கோயிலின் பக்கத்தில் இருந்த சிறு பலகை வீட்டில் தொடங்கியது. 1923 ஆம் ஆண்டு, செட்டியார் இப்பள்ளிக்கு ‘ராமநாதன் வித்தியா சாலை’ என்றே பெயரிட்டார். அப்போது இப்பள்ளியில் தமிழ்வகுப்புகளும் பின்னல், விவசாயம் போன்ற கைதொழில்களும் போதிக்கப்பட்டன. இப்பள்ளியின் மாணவர்கள் பெரும்பாலும், பக்கத்தில் இருந்த தோட்டங்களில் இருந்தும், ரயில்வே ஊழியர்களின் குடும்பங்களில் இருந்தும் வந்தனர். பிறகு மாணவர் எண்ணிக்கை கூடியதால் கம்போங் பாருவில் அரசாங்க நிலத்தில் அரசாங்க முழு மானிய தமிழ்ப்பள்ளியாக புது கட்டிடத்திற்கு மாறியது. பொதுவாக செட்டியார்கள் பினாங்கிலும் மற்ற மாநிலங்களிலும் பல தமிழ்ப்பள்ளிளை உருவாக்கி உள்ளனர். நிலம் கொடுத்தவர்களும் உண்டு. அந்த வகையில் அவர்கள் இந்நாட்டில் தமிழ்க்கல்வி வளர பாடுபட்ட முன்னோடிகளாவர்.

ஆயினும், தமிழ்ப் பள்ளிகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டிய செட்டியார்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களில் செட்டியார்களும் உண்டு. என்றாலும் அவர்களும் தங்கள் பிள்ளைகளை காண்வென்டு அல்லது ஸ்தோவெல் போன்ற ஆங்கில பள்ளிகளுக்குதான் அனுப்புவது வழக்கம். வீட்டிலேயே சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் கல்வி வழங்குவது உண்டு. இன்றும் இந்நிலை தொடரவே செய்கிறது. ஆகவே சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் செட்டியார்களின் இளம் தலைமுறை மக்கள் ஆங்கிலத்தில் எழுதியே தேவார திருவாசகங்களை பாடுவதை பார்க்க முடிகிறது. பொதுவாக மலேசியாவில் கற்ற, செல்வம் பெற்ற மேல்மட்ட மக்களின் மனநிலையோடு இது ஒத்துபோகிறது. சமூகத்தில் தனிப்பட்ட சிறப்புகள் கொண்டு உயர்ந்து நிற்போர் தங்கள் பிள்ளைகள் சராசரி மக்கள் பயிலும் பள்ளியில் பயில விடுவது தங்கள் மதிப்பிற்கு கலங்கம் ஏற்படுத்தும் என்னும் மனோபாவம் இதற்கு மூல காரணம். அதிகார மனோபாவமும் மேட்டிமை புத்தியும் பிற இனங்களைவிட நம்மிடம் கூடுதலாக இருப்பதால்தான் தமிழ்ப்பள்ளிகள் இன்றைக்கும் சிலரால் இழிவாக பார்க்கப்படுகிறது.

இவ்விடத்தில் வரலாற்று நிகழ்வுகளை மீள்பார்வை செய்யும் போது நகரத்தாருக்கும் NTS ஆறுமுகம் பிள்ளைக்கும் இடையில் நடைபெற்று வந்த வியாபார பூசலும் அதன் வழி சமுதாய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமும் சத்தமின்றி நடந்திருப்பது தெளிவாக உணரமுடிகிறது.  இந்த போராட்டத்தை சாதீய நோக்கோடு பார்க்க தேவையில்லை என்றாலும் இது சிறுபான்மை சமூகத்தில் நிலவிய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.

NTS ஆறுமுகம் பிள்ளையின் வருக்கைக்கு முன் பி.எம் நகரில் தமிழர் பிரதிநிதியாக செட்டியார்களே இருந்துள்ளனர். முத்து பழனியப்ப செட்டியார் அதில் முக்கியமானவர். அவர் பெயரிலேயே இன்று ஒரு சாலையும் உள்ளது. கோயில் பள்ளிக்கூடம், பஞ்சாயத்து என்று பல நிலைகளில் செட்டியார்கள் நகரில் திடமாக காலூண்றி இருந்தனர். ஆனால் 70-ஆம் ஆண்டுகளில் பல தொழில்களில் செல்வம் திரட்டி பணக்காரராக வளர்ந்த NTS ஆறுமுகம் பிள்ளை தனது செயல்பாட்டின் வழி நகரின் இந்திய பிரதிநிதித்துவத்தை மெல்ல தன்வசப்படுத்திக் கொண்டார்.

முருகன் கோயிலுக்கு இணையாக அவர் மங்கள நாயகி அம்மன் கோயிலை மாற்றினார். பள்ளிகள், இயக்கங்கள் போன்ற பல அமைப்புகளுக்கு பண உதவி செய்து சமூகத்தில் முன்னின்றார். பினாங்கு தண்ணீர் மலையிலும் இவர் செட்டியார்களின் செல்வாக்கிற்கு இணையாக பல உதவிகளைச் செய்தார். கட்டிட விரிவாக்கம் செய்தார். மண்டபம் கட்டினார். பி.எம் நகரில் முத்துப் பழனியப்ப செட்டியாரின் பெயர் ஒரு சாலைக்கு இருப்பது போல் NTS ஆறுமுகம் பிள்ளை பெயரிலும் ஒரு சாலை இருப்பது குறிப்பிடத் தக்கது.

செட்டியார்கள் பலர் வயது முதிர்ந்து தாயகம் திரும்பும் சூழலில் அவர்கள் நகரில் கொண்டிருந்த சொத்துகளை NTS ஆறுமுகம் பிள்ளை தாம் வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் ஆயினும் நகரத்தார்கள் நீண்ட மெளனம் சாதித்து இருதியில் சீனரிடம் விற்று விட்டு சென்றதாகவும் ஒரு செவி வழிக் கதை உள்ளது. பிள்ளை அவர்களைப் பற்றி நிறைய கதைகள் உள்ளன. உதாரணத்திற்கு நாட்டில் முன்னனி ஹோண்டா மோட்டார் சைக்கில் நிறுவனர் BOON SIEW  ஆறுமுகம் பிள்ளை அவர்களிடம் கடன் பெற்றே தன் வியாபாரத்தை தொடங்கினார் என்று கூறுவர். அதே போல் பிள்ளை அவர்களின் வருமானவரி வசூலில் சந்தேகம் கொண்ட அரசாங்கம் ஒரு உலவாளியை அவருடன் இந்தியா வரை அனுப்பி அவரின் சொத்து மதிப்புகளை கணக்கெடுத்து பின்னர் அவர் மேல் சம்மன் அனுப்பியதாக கூறுவர்.  NTS ஆறுமுகம் பிள்ளை பிரமாண்டமாக தொடங்கி வியாபாரம் செய்த சவுளி கடைக்கு பக்கத்து கட்டிடங்களை வாங்க அவர் எடுத்த முயற்சிகள் பயனலிக்காமல் போனதற்கு செட்டியார்களின் மனத்தடையே காரணம் என்னும் கூறுவர்.

செட்டியார்கள் தாங்கள் இங்கு இல்லாமல் போனாலும் தங்களுக்கு இணையாக வளர்ந்து சவாலாக இருந்த மற்றவருக்கு தங்கள் சொத்துகளை விற்க விரும்பவில்லை போலும். ஆயினும் இதனால் ஆதாயம் அடைந்தவர்கள் சீனர்களே. குறைந்த விலையில் சீனரே அச்சொத்துக்களை வாங்கியுள்ளார்.

ஆயினும் இன்று நகரில் செட்டியார்களின் செல்வாக்கும் இல்லை. NTS ஆறுமுகம் பிள்ளையின் செல்வாக்கும் இல்லை. செட்டியார்கள் வட்டிக்கடையில் அமர்ந்து கணக்கு எழுதிய காலம் மறைந்தே போய்விட்டது. அதே கடை வரிசையில் பிள்ளை அவர்கள் நடத்திய சவுளி வியாபாரமும் பல கைகள் மாறி இன்று இல்லாமல் ஆகிவிட்டது. அவர்களுக்குள் இருந்த பிணக்கும் போட்டியும் கூட இல்லாமல் போய்விட்டது. மணிகுண்டு கோபுரம் மறந்து போனது போன்றே நகரில் அவர்களின் செல்வாக்கும் மறைந்துவிட்டது. ஆயினும் அவர்கள் உருவாக்கிய கோயிலும் பள்ளிகளும் மட்டும் அவர்களை நினைவு கூர்ந்தபடி தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளன.

தொடரும்..

 

உதவிய படைப்புகள்

மலேசிய நண்பன் (2012), பினாங்கு மருத்துவ சங்க வரலாறு, வடமலை

மலாயாவின் தோற்றம் 1930 ( (மறு பதிப்பு) – பெ.நா.மு. முத்துப்பழனியப்ப செட்டியார், JP

http://ssquah.blogspot.my/2013/10/a-little-history-of-bukit-mertajam.html

Leave a comment

தொகுப்பு

வந்தவர்கள்

  • 15,772 hits