கூலிம் நவீன இலக்கிய களம் : தோற்றமும் வளர்ச்சியும்- ஒரு கண்ணோட்டம்

1

June 10, 2017 by pandiyananbalagan

2012-ஆம் ஆண்டு நான்காவது வல்லினம் கலை இலக்கியவிழாவுக்கு நான் முதன்முறையாக சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு கோலாலம்பூர் செல்வது அதுவே முதல் முறை. அப்போது வல்லினத்தில் எனது சிறுகதைகள் ஒன்றோ இரண்டோ வந்திருந்தன. நவீன் இலக்கிய கலைவிழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார். அவரே எழுத்தாளர் நண்பர் கே.பாலமுருகனோடு ஒன்றாக வந்துவிட ஆலோசனையும் கூறினார். ஆகவே நான், பாலமுருகன், தினகரன் மூவரும் ரயிலில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து கலை இழக்கிய விழா நடைபெற்ற கிராண் பசிஃபிக் விடுதிக்குச் சென்றோம். அ.மாக்ஸும், ஆதவன் தீட்சன்யாவும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்

நிகழ்ச்சி முடிந்து விரிவுரையாளர் குமாரசாமியின் காரில் வீடு திரும்பினோம். அவரும் மணிஜெகதீசனும் ஒன்றாக காரில் பயணம் செய்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். காரில் இடம் இருந்ததால் நாங்களும் அவர்களுடன் இணைந்துகொண்டோம். வரும் போது காரில் நிகழ்ந்த உரையாடலில்தான் கூலிம் தியான ஆசிரமத்தில் ஓர் இலக்கிய சந்திப்பு மாதந்தோரும் நிகழ்கிறது என்ற தகவலே எனக்குக் கிடைத்தது.

2011-ல் ஜெயமோகன் வந்து சென்ற பின்னர் கூட நான் கூலிம் இலக்கிய சந்திப்புகள் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. உண்மையில் நான் அந்த முறை ஜெயமோகன் நிகழ்ச்சிகளுக்குச் செல்லவே இல்லை. இத்தனைக்கும் அப்போது விஷ்ணுபுரத்தை வாசித்து ஒரு பிரமிப்பில் இருந்தேன். சில பக்கங்களுக்கு ஒரு விமர்சனம் எழுதி நானே தொடங்கியிருந்த அகப்பக்கத்திலும் பதிவேற்றியிருந்தேன். நான் ஏன் ஜெயமோகன் உரைகேட்க அப்போது செல்லவில்லை என்பது நினைவில் இல்லை.

ஆனால் துங்கு பைனூன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற ஜெயமோகன் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய என் மனைவி நான் நிகழ்ச்சிக்கு செல்லாததை மிகப்பெரிய குறையாக சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தார்.

கே. பாலமுருகன் மாதம் ஒருமுறை என்னை கூலிம் இலக்கிய சந்திப்புக்கு வரும்படி அழைத்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது செவ்வாய்க் கிழமை அந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவலும் கிடைத்தது. அது ஏன் மூன்றாவது செவ்வாய் என்று அப்போது தெரியவில்லை. சுவாமி அன்றுதான் ஓய்வாக இருப்பார் என்ற விபரம் பிறகு தெரிந்தது.

சந்திப்பு நிகழும் தேதியை பாலமுருகன்தான் அழைத்துச் சொல்வார். அப்போது வட்சாப் புலக்கத்தில் இல்லை. ஆகவே அழைப்புதான். ஆயினும் சில மணி நேரங்களை ஒதுக்கிக் கொண்டு சந்திப்புக்குச் செல்வது எனக்கு அன்றைய சூழலில் சவாலாகத்தான் இருந்தது. கூலிம் பாயா பெசார் சிற்றூரில் அமைந்திருக்கும் தியான ஆசிரமத்துக்கு முன்னர் சிலமுறை சென்றிருக்கிறேன். ரே.கார்த்திகேசுவின் நூல் வெளியீடு ஒன்றும் அங்கு நிகழ்ந்திருந்தது.

இப்படியாகத்தான் நான் கூலிம் நவீன இலக்கியக் களத்தோடு தொடர்புடையவனானேன். மிகுந்த தயக்கத்துடன்தான் முதல் சந்திப்புக்குச் சென்றேன். கோ.புண்ணியவான், தமிழ்மாறன், குமாரசாமி, மணிஜெகதீசன், பாலமுருகன், தினகரன் ஆகியோருக்கிடையே நடுநாயகமாக சுவாமி அமர்ந்திருந்தார். அவர்களில் நான், பாலமுருகன், தினகரன் தவிர்த்து மற்றவர்கள் சுவாமியின் கீதைவகுப்புகளுக்கு தொடர்ந்து வருபவர்கள் என்று அறிந்தேன். சற்றே இலக்கியமும் சற்றே அரட்டையுமாக அந்த சந்திப்பு இருந்தது. இன்றும் அப்படிதான் இருக்கிறது.

எந்தவித அழுத்தமும் இல்லாமல் நட்பு அடிப்படையில் எல்லாரிடமும் பேசி சிரிக்கமுடிந்தது. ஆயினும் வார்த்தைகளை மிக கவனமாக வெளியிடுவதில் நான் எச்சரிக்கையாக இருந்தேன். நான் துடுக்குத்தனமாக ஏதாவது சொல்லக் கூடியவன் என்கிற அச்சம் இருந்ததால் யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை அது. ஆனால் சுவாமியும் புண்ணியவானும் நீண்டகால நண்பர்கள் என்பதால் பகடியும் நையாண்டியுமாக பேசிக் கொள்வது வாடிக்கை.

சுவாமியின் அலுவலக அறையிலேயே சந்திப்பு நடைபெற்றது. அறையில் சுவரோர அலமாரி அடுக்குகளில் பலநூறு நூல்கள் அடுக்கிவைக்கப்ப்ட்டிருந்தன.அவ்வளவையும் அவர் வாசித்திருப்பாரா என்ற சந்தேகம் வந்தாலும் அவை அவரது தனிப்பட்ட சேகரிப்பு என்பது தெளிவானது. சமய, ஆன்மீக நூல்கள்ளோடு இலக்கிய நூல்கள் அதிலும் நாவல்களும் சிறுகதை தொகுப்புகளும் பல இருந்தன. ஒரு துறவி நாவல்களும் சிறுகதைகளும் வாசிப்பார் என்பது வியப்பான உண்மையாக இருந்தது.

நவீன இலக்கியக் களத்தின் சந்திப்புகள் நடத்த இடம் கொடுத்து சந்திப்பு முடிந்ததும் அனைவருக்கும் உண்டி கொடுக்கும் பொறுப்பையும் சுவாமியே ஏற்றிருந்தார். கட்டணம் எல்லாம் இல்லை. விருந்தோம்பல்தான். இரவு உணவுக்கு ஏற்ற சில உணவு வகைகளையும் பழங்களையும் அவர் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏற்பாடு செய்துவிடுவார்.

2008ஆம் ஆண்டில் பாலமுருகன் அடிக்கடி இலக்கியம் சார்ந்து உரையாட சுவாமியை ஆசிரமத்திலேயே சென்று சந்திப்பதுண்டு. அப்பொழுது சுவாமி எஸ்.ராமகிருஷ்ணன், மேலும் சில நவீன இலக்கியவாதிகளின் நூல்களை வாசிக்கத் துவங்கியிருந்த ஒரு காலக்கட்டம் என்பதால் இலக்கியம் பேச வரும் எழுத்தாளர்களை அன்போடு அரவணைத்துக் கொண்டார். அச்சயம் அநங்கம் இதழுக்குச் சுவாமியை நேர்காணல் செய்ய நேர்ந்தபோதுதான் பாலமுருகன் மாதந்தோறும் ஓர் இலக்கிய சந்திப்பை ஏற்படுத்தலாம் என்கிற சிந்தனையைச் சுவாமியுடன் பேசி ஆலோசித்தார். இலக்கியத்தின் மீது தீராத நாட்டம் கொண்டிருந்த சுவாமி உடனே தன் நண்பர்களையும் இணைத்து அத்தகையதொரு சிந்தனைக்கு உறைவிடம் அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னரே, நவீன இலக்கியக் களம் உயிர்ப்பெற்றது என்று சொல்லலாம். இத்தகையதொரு இலக்கிய சந்திப்புக்கான சிந்தனையை முதலில் தூண்டியவர் பாலமுருகன் ஆவார். பின்னர், எழுத்தாளர் கோ.புண்ணியவான், வாசகர் மணிஜெகதீசன், விரிவுரைஞர் குமாரசுவாமி, விரிவுரைஞர் தமிழ்மாறன் ஆகியோரும் இணைந்து அச்சந்திப்பு வலுப்பெற்றது. 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு நானும், தினகரனும் இணைந்தோம்.

வடவட்டாரத்தில் எம்.ஏ இளஞ்செல்வன் தலைமையில் நவீன சிந்தனைக் களம் என்ற ஒரு அமைப்பு முன்பு இருந்தது, அந்த அமைபின் வழியாகத்தான் கோ.புண்ணியவான், துரை முனியான்டி, கோ.முனியான்டி ஆகியோர் இணைந்து புதுக்கவிதை மாநாட்டை நடத்தினர். அதன் பிறகு வடவட்டாரத்தில் தீவிர இலக்கியம் பேசும் அமைப்புகள் எதுவும் இல்லாதது ஒரு வெறுமையைத் தோற்றுவித்திருந்தது. நவீன இலக்கிய களம் அந்த வெறுமையை போக்கும் அமைப்பாக செயல்படதொடங்கியது.

தொடக்கத்தில் பொது நிகழ்ச்சிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. வாசிப்பு அனுபவ பகிர்வாகவும் இலக்கிய கலந்துரையாடலாகவும் மட்டுமே அது இருந்தது. தமிழக எழுத்தாளர்கள் மலேசியாவுக்கு வருகைதரும் போது அவர்கள் கோலாலம்பூர் நிகழ்ச்சிகளோடு திரும்பிவிடாமல் வடக்கு பக்கமும் அழைத்து சந்திப்புகளைச் செய்யும் பணி பின்னர் தாமே அமைந்தது. வல்லினம் நிகழ்ச்சிகளுக்காக கோலாலம்பூர் வருபவர்களை வடக்கு மாநிலங்களுக்கு அழைத்துவந்து நவீன இலக்கிய களம் சந்திப்புகளை நிகழ்த்தமுடிந்தது. ஆசிரமத்தில் தங்கும் வசதியும் உணவும் கிடைத்துவிடுவதால் மிக இலகுவாக இச்சந்திப்புகள் நடைபெற்றன. தமிழக எழுத்தாளர்களை உபசரிக்கும் பொறுப்பை சுவாமியின் ஆதரவுடன் இலக்கிய களம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவ்வகையில் சாரு நிவேதிதா, அ.மாக்ஸ், இமையம், சுப்ரமணிய பாரதி,  கலாபிரியா, யாவனிக்கா ஶ்ரீராம்,  ஜெயமோகன், நாஞ்சில் நாடன் என்று பலரும் வந்து சென்றுள்ளனர்.

நவீன இலக்கிய களத்தின் செயல்பாட்டை மேலும் விரிவாக்கும் பொருட்டு, 2015-ஆம் ஆண்டு இலக்கிய முகாம் ஒன்றை செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது. சுவாமியும் கோ.புண்ணியவானும் ஜெயமோகன் ஊட்டியில் நடத்தும் இலக்கிய முகாமுக்கு சென்று வந்த அனுபவம் இருந்ததால் அவ்வகையான முகாம் ஒன்று நடத்துவது நமக்கும் பயனளிக்கும் என்று முடிவானது. ஜெயமோகனே இந்த முகாமையும் நடத்த சம்மதம் தந்த பின்னர் பினாங்கு கொடிமலையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து மூன்று நாள் இலக்கிய முகாம் நடைபெற்றது. வசதியான அந்த இடம் கிடைப்பது சுவாமியின் செல்வாக்கால் சாத்தியமானது. நாடு முழுவதும் இருந்து இலக்கிய வாசகர்கள் ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என்று பலரும் இருந்தனர். அதில் சுவாமியின் சமய வகுப்பு மாணவர்கள் பலர். அவர்களுக்கு உண்மையில் தமிழ் இலக்கிய பரிட்சையம் இல்லாவிட்டாலும் சுவாமியின் மேல் இருந்த மரியாதைகாரணமாக கலந்துகொண்டார்கள். முகாம் வெற்றிகரமாக முடிந்தது. செலவில் விழுந்த துண்டுகளை சுவாமியே ஏற்றுக் கொண்டார்.

2014-இல் கே.பாலமுருகன் களம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றிதழ் தொடங்கலாம் என்ற திட்டத்துடன் என்னுடன் கலந்துபேசினார். பாலமுருகன், நான், தினகரன் மூவரும் பொறுப்பேற்று அவ்விதழை வெளியிட்டோம். பாலமுருகன்தான் ஆசிரியர். மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக தரமான கட்டுரைகளுடன் அவ்விதழ் வெளிவந்தது.     கூலிம் தியான ஆசிரமத்தில் அவ்விதழ் வெளியிடப்பட்டது. அப்போது தமிழகத்தில் இருந்து மலேசியா வந்திருந்த பேராசிரியர். அ.ராமசாமி நூலை வெளியிட சுவாமி பெற்றுக் கொண்டார். ஆனால் அதன் பின் அவ்விதழ் பல்வேறு காரணங்களால் வெளிவரவில்லை.

அதன் பிறகு வேறுபல பொது நிகழ்ச்சிகள் செய்ய நவீன இலக்கிய களம் திட்டமிட்டாலும் எதுவும் சாத்தியமாகவில்லை. மாதாந்திர கலந்துரையாடல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மலேசியா வரும் தமிழக நவீன படைப்பாளிகள் ஆசிரமத்துக்கு வந்து கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது வாடிக்கையாக இன்றும் தொடர்கிறது.

இம்மாத தொடக்கத்தில் நடந்துமுடிந்த இலக்கிய முகாம் 2, நவீன இலக்கிய களத்தின் அன்மைய நிகழ்ச்சியாகும். மீண்டும் இலக்கிய முகாம் நடத்தும் திட்டம் சென்ற ஆண்டே ஆலோசிக்கப்பட்டாலும் அது இந்த ஆண்டுதான் சரிபட்டிருக்கிறது. ஜெயமோகனையும் பிரபஞ்சனையும் அழைக்கலாம் என்றுதான் முதலில் திட்டமிருந்தது. ஆனால் பிரபஞ்சனின் உடல் நிலை கருதி நாஞ்சில் நாடனை அழைக்க முடிவானது. கடந்த ஆண்டு வல்லினம் கலை இலக்கிய விழாவுக்கு நாஞ்சில் வந்திருந்தார். ஆனால் அவரது பயண ஏற்பாடு மிக குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டிருந்ததால் வடக்கு மாநிலங்களுக்கு அவரை அழைக்க முடியாமல் போனது. சுவாமிக்கும் அதில் ஒரு சிறு வருத்தம் இருந்தது.

இவ்வாண்டு வல்லினம் குறுநாவல் பட்டறைக்கு தேதி குறித்து ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் அழைத்த அதே நேரத்தில் நவீன இலக்கிய களம் திட்டமிட்டிருந்த இலக்கிய முகாமுக்கும் தோதாக தேதி குறித்து அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. சுவாமியும் பாலமுருகனும் தொடர்புத் துறையை கவனித்துக் கொண்டனர். முதல் வாரம் வல்லினம் பட்டறையில் கலந்து கொண்டு வார இறுதியில் கூலிம் இலக்கிய முகாமில அவர்கள் கலந்து கொள்வதாக முடிவானது.

இவ்வாண்டு முகாம் நடத்த இடப்பிரச்சனை எழவில்லை. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட ஆரம்பகட்டத்திலேயே சுங்கை கோப்பில் நிர்மானிக்கப்பட்டுள்ள புதிய ஆசிரமத்தில் முகாம் நடத்த சுவாமி  அனுமதி கொடுத்திருந்தார். உணவும் அங்கேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மிக குறைந்த கட்டணம் விதிக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படியே அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

முகாமுக்கான நாள் நெருங்கினாலும் அதற்கான ஏற்பாடுகள் மிக மந்தமாக நடப்பதாக உணர்ந்தேன். முகாமுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை கணிப்பதில் சிரமம் இருந்தது. சிலர் முழுமையாக தங்க முடியாது என்றனர். சிலர் பெயர் கொடுத்துவிட்டு வருவது உறுதியில்லை என்று கூறிவிட்டனர். தமிழ்மாறன் தன் சார்பில் முப்பது பேரையும் குமாரசாமி தன் சார்பில் முப்பது பேரையும் அழைக்க முடியும் என்று கூறினர். புண்ணியவான் சிங்கப்பூர் நண்பர்களையும் அழைத்திருந்தார்.

நான் வல்லினம் நண்பர்கள் தவிர மேலும் ஐவரை அழைத்தேன். அதில் இரண்டுபேர்தான் கலந்து கொண்டார்கள். முகாம் பற்றி கூறியது முதல் நண்பர் அகுஸ்டீன் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். அவர் கடந்த முகாமிலும் கலந்து கொண்டவர். இம்முறை மனைவி மகனுடன் வந்து கலந்துகொண்டார்.

முகாமில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் பேசவேண்டிய தலைப்புகளை முடிவெடுக்க முடியாமல் நீண்டு கொண்டு போனது. பாலமுருகன் ஜெயமோகனுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வர தாமதமாகியது. அவர் வெளியூர் சென்றுவிட்டதாக அறிந்தோம். மேலும் முகாமுக்கு ஜெயமோகனின் தமிழக வாசகர்கள்/ நண்பர்கள் பதினைந்துபேர் வருவதாக தகவல் வந்தது. எல்லாருக்குமே சற்று மலைப்பாக இருந்தது. பதினைந்து பேரை எப்படி உபசரிப்பது என்கிற குழப்பம் அது. ஆனால், சுவாமி ‘அதெல்லம் பிரச்சனை இல்லை, கவலை வேண்டாம்’ என்று மிக சுலபமாக கடந்துவிட்டார். நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில்தான் நிகழ்ச்சி நிரல் உறுதிசெய்யப்பட்டது. குமாரசாமி திருத்தி திருத்தி இறுதியாக நிழச்சி நிரலை நேர்செய்தார். அவ்வப்போது எழும் கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் ஒத்த முடிவாக எடுப்பது என்று பேசிக்கொண்டோம்.

முடிவாக திட்டமிட்டதைவிட சிறப்பாகவே முகாம் நடந்து முடிந்தது. நாட்டின் பல மாநிலங்களிலும் இருந்து வாசகர்கள் வந்திருந்தார்கள். வெண்முரசு வாசகர்கள், நவீன இலக்கிய தேடல் உள்ளவர்கள், சுவாமியின் சமய வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பயிற்சி கல்லூரி மாணவர்கள் என்று சுமார் நூறு பேர் கலந்துகொண்டது மகிழ்ச்சி தந்தது. தமிழகம் தவிர சிங்கையிலிருந்தும் வாசகர்கள் வந்திருந்தார்கள்.

முகாமின் ஊடே வெள்ளிக்கிழமை இரவு பொது நிகழ்ச்சி ஒன்றை வைத்திருந்தோம். ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் ஆற்றும் இலக்கிய உரை அது.   அந்த உரையைக் கேட்க மதியமே பலர் வந்துவிட்டது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பல்வேறு திறப்புகள், புதிய கருத்தாக்கங்கள், தகவல்கள், நம்பிக்கைகள் என்று இம்முறை நவீன இலக்கிய களம் ஏற்பாடு செய்த இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடந்தது என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஏற்பாட்டளர்களுக்கும் செலவு நெருக்கடி ஏற்படவில்லை. பங்கேற்பாளர்கள், எதிர்ப்பார்த்து வந்தது கிடைத்ததா என்று தெரியாது. ஆனால் அவர்களை வரலாறு, பன்பாடு இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் புதிய கோணத்தில் சிந்திக்க இம்முகாம் துண்டியிருக்கும் என்று நம்பலாம்.

10/6/2017

One thought on “கூலிம் நவீன இலக்கிய களம் : தோற்றமும் வளர்ச்சியும்- ஒரு கண்ணோட்டம்

  1. Manimaran Palaniappen says:

    மகிழ்ச்சி, பாண்டியன்.

    Like

Leave a comment

தொகுப்பு

வந்தவர்கள்

  • 15,719 hits